Monday, October 25, 2010

நடுபுள்ளே!

"ஏஏ நடுபுள்ளேஏஏ! செத்த நாழி இங்க வா! கொஞ்சம் இந்த தொவரம்பருப்ப சுத்தம் பண்ணு ! அத முடிச்சிட்டு அப்படியே நெல்லை குத்திட்டின்னா ராவைக்கு சோறாக்கிடலாம் " என்ற அண்ணியின் முகத்தை பார்த்தாள் தேவகி.

குமாரசாமிக்கு பிறந்த ஏழு பேரில் அவள் வரிசை முறைப்படி நான்காவது. அண்ணன்கள் ரெண்டு பேருக்கு பிறகு அக்கா , தேவகிக்கு கீழே ஒரு தங்கை மற்றும் இரண்டு தம்பிகள்.

இத்தனை பேர் இருக்கும் வீட்டில் எப்போதும் வேலையயிருக்கும். நல்ல தண்ணி எடுக்க கேணிக்கு போகணும். மத்தபடி மாடுக்கு, பாத்திரம் கழுவ , வாசல் தெளிக்கன்னு ஏரி தண்ணி எடுக்கணும். அப்பா யாவாரம் செய்யறதால எப்பவும் காப்பி தண்ணி சப்பாடுன்னு ஒரு பெரிய கூட்டத்துக்கு தினம் வேலை செய்யணும்.

நடுவில பிறந்ததால யாருமே அவ்வளவா தேவகி மேல அக்கறை படறதில்லை. அக்காளும் தங்கச்சியும் ஒரு வேலையும் செய்யறதில்லை. தேவகிக்கு வேலை செய்யறதில ஒரு கஷ்டமும் தெரியாது. எல்லாத்திலும் ஒரு பதவிசு இருக்கும். பள்ளிக்கூடத்துக்கு போனதென்னவோ ஆறாம் வகுப்பு வரைக்கும் தான்.ஆனா பயங்கர திறமைசாலி.

அவள் பிறந்த நேரம் அப்பா செய்த தொழில் விருத்தியானது. பெரியண்ணன் அவள் மேல உயிரே வச்சிருந்தார். அப்பாவும் எல்லா காரியங்களிலும் தேவகி செய்யறது மாதிரி வராதுன்னு அவ்வளவு அன்பா இருந்தார்.

சுத்துபட்டு கிராமத்தில எல்லாம் நடுபுள்ளன்னா தேவகி தான். பண்ணையடிக்கறவங்க எல்லாம் நடுபுள்ள கையால வாங்கினா விருத்தியாகும்ன்னு சொல்லிட்டு போவாங்க.

கலியாண வயசு வந்ததும் அண்ணனும் அப்பாவும் சேந்து நல்லா படிச்ச மாப்பிள்ளையா கவர்மென்ட் உத்தியோகஸ்தருக்கு கலியாணம் பண்ணி வச்சாங்க.
கவர்மென்ட்டு உத்தியோகம்ன்னாலும் கஷ்ட ஜீவனம் தான் நடுபுள்ளைக்கு.
ஆணும் பொண்ணுமா 4 குழந்தைகளும் ஆச்சி.. பொண்ணுக்கும் கலியாணம் கட்டி வெளிநாட்டுல இருக்கா. பசங்களுக்கும் கலியாணம் ஆயி கடைசிலவன் மட்டும் இப்போ வீட்டில‌ இருக்கான்.

மூணாவ‌தா பைய‌ன‌ ந‌ள்ள‌வ‌னேன்னு கூப்பிடும் போதெல்லாம் ஊரு நிய‌ப‌க‌ம் வ‌ந்துடும் ந‌டுபுள்ளைக்கு...பிள்ளாரெல்லாம் வ‌ந்த‌தும் பிள்ளைக‌ள் பேரோட ராசா அம்மா இல்லைன்னா செல்வாம்மான்னு பேராச்சே த‌விர‌ யாருக்கும் ந‌டுபுள்ளேன்னு கூப்புட‌ வ‌ராது.ஊருக்கு போனாலும் பெரிசுக யாராவது நடுபுள்ளேன்னு கூப்பிட்டா தானுண்டு.

வயசான காலத்தில யாரவது நடுபுள்ளேன்னு கூப்புட மாட்டாங்களான்னு தேவகி மனசு ஏங்கும்!!!

கூப்பிட்டு பாருங்களேன்.....ஏஏஏஏ நடுபுள்ளேஏஏஏ!!!

Friday, October 1, 2010

இன்னபிற!


நிறைய எண்ணங்கள் அதில முழுசா ஒன்னும் சொல்ல முடியாம ரெண்டே ரெண்டு வரி மனசில ஓடும். அதை வச்சி கதை பண்ண தெரியாம ஐடியா கூடைக்குள்ள போயி அங்கயும் இருந்து ஓவர்ஃபளோ ஆகி.. இன்னபிற ( எக்சட்ரா :))

மத்தவங்கள நாம எதாவது ஒரு குறை சொல்ல போக மீதமிருக்கும் 4 விரல் நம்மை காட்டுதே ஏன்?? அப்ப மனசுக்குள்ள ஒரு வாய்ஸ் " இப்ப என்ன சொல்லறே! இப்ப என்ன சொல்லறே" அப்படி கூவும்(கூவணும் )???!!!

அப்போ நீங்க எல்லாம் என்ன செய்வீங்க... வீராப்பா நான் பெரிய லார்ட் டேஷ் தாஸ்ன்னு பேசிட்டு இருக்கும் போது சின்னதா அடே நானும் இப்படி ஒரு முறை செய்தேனே இல்லைன்னா இப்படி பேசினேனென்னு நினைவுக்கு வருமே "அப்ப என்ன செய்வீங்க ! அப்ப என்ன செய்வீங்க!"

சில நேரம் "நோ" என்று சொல்ல தெரியாம மென்னு முழுங்கி யார் என்ன சொன்னாலும் "பூம்" "பூம்" ந்னு தலையாட்டி வச்சிட்டு பின்னாடி நம்மள ஒரு காரியம் செய்ய சொன்னவங்கள ஒரு முழு நீள வசைபாட்டு பாடுவோமே ...அப்புறம் அவங்க நீங்க நேரமெடுத்து செய்த வேலைக்கு"நன்றி" ஒரே வார்த்தை தான் . அது மட்டும் சொன்னா போதாது இல்லையா :)
அது கூட சொல்லாம போறவங்களுக்கு என்ன பாட்டு பாட...

சிலர் இருக்காங்க.. அடுத்தவங்க வாழ்க்கையில் நடக்கிற எல்லா விஷயமும் தெரிஞ்சுக்குவாங்க ... ஒண்ணு ஒண்ணா தூண்டில் போடுறது அப்புறம் 199_ இல்லை 200_ல நாம சொன்ன விஷயம்/காரியம் எல்லாம் நினைவுக்கு வச்சி அதுக்கு ஸ்டேடஸ் அப்டேட் :) இப்படி ஒருத்தங்கள பிரெண்டா வச்சிக்க வேணும் தானான்னு தோணும். இதுல பரஸ்பர பகிர்தல் இருந்தாலாவது பரவாயில்லை. இவங்க எல்லாம் தங்கள ரொம்ப திறமைசாலின்னு வேற நினைச்சுக்குவாங்க...
இவங்கள என்ன பண்ண ??

இதெல்லாம் சகஜமப்பா அப்படின்னு சொல்லறீங்களா??
இப்படி எந்த வித டிராமாவும் இல்லாம ஒரு பாசிட்டிவ் பிரெண்ஷிப் ஏன் இருக்க கூடாது. எனக்கும் பலர் இப்போ இருக்காங்க.. எப்பவுமே சொல்லுவேன் அலைவரிசை சரி வரலைன்னு... இப்போல்லாம் என்னோட அணு சுழற்சி பாதையில் அதிகமாக எலெக்ட்ரான்கள் :))

ரொம்ப பொலம்பிட்டேனா??!!!!

எங்க பக்கத்து வீட்டு குட்டீஸ் ரொம்ப புத்திசாலி. இன்டெர்னெட்ல எதோ புதிர் எல்லாம் போட்டு அதில ஹானர்ஸ் ரோலில் அவன் பேர் வந்திருந்தது. நான் "கங்கிரஜிலேஷன் ஆர்யான்" என்று சொன்ன போது "ஆன்டி என் பேர் எப்போ எக் ரோலில் வரும் " என்று கேட்டான்.. ஒரே சிரிப்பு போங்க !