
இப்ப நாம் பார்க்கும் எல்லாருக்குமே எல்லாம் உடனே நடக்கணும். குழந்தை முதல் முதியவர் வரை இதே கதை தான்... குழந்தை பிறந்ததுமே படிச்சிடணும்.. உடனே ஸ்கூலுக்கு போயி அங்க ஃப்ர்ஸ்ட் ரேங் எடுத்து.. காலேஜிக்கு போயி.. கேம்பஸிலே வேலை கிடைச்சி....சொல்லற /விரும்பற பொண்ணை/பையனை கல்யாணம் பண்ணி... குழந்தை பெற்று.. இந்த வாழ்க்கை சுழற்சி மறுபடியும் அதே பாதையில் தான் தொடருது...
இங்க யாருக்கும் நின்னு நிதனமா எதையும் அனுபவிக்க முடியலை.. அனுபவிக்கவும் மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்க....ஏன்??!!! எல்லாமே உடனுக்குடன் நடக்க தொழில்நுட்பம்( டெக்னாலஜி) உதவுது. இப்படி உடனுக்குடன் கிடைப்பதாலோ இல்லை அந்த எதிர்பார்ப்பு இருப்பதாலோ என்னவோ மக்களுக்கு மனோதிடம் குறைந்து வருதோன்னு தோணுது.
எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியலை. எல்லாமே உடனே நடக்கணும்ன்னா நீங்க மத்தவங்களுக்கு/உலகத்துக்கு என்ன செய்தீங்க அதாவது... என்டைடில்மென்ட் என்று ஒரு வார்த்தை இருக்கு ( கேள்வி ஆங்கிலத்தில்: What did I do to deserve this good? )
எதுவுமே எளிதா கிடைத்தால் அது நமக்கு சரியானது தானா என்றும் யாரும் யோசிப்பதில்லை. கடின உழைப்பும் காத்திருத்தலும் இல்லாமல் கிடைக்கும் பொருளின் அருமையை யாரும் உணர்வதில்லை.
15 வருஷம் சாப்பிட்ட நெய் தோசையின் தாக்கத்தை சில மணி நேர அறுவை சிகிச்சை மூலம் அகற்றுகிறார்கள். ஆரோக்கியமா வாழ்வது ஒரே நாளில் வருவதில்லை இல்லையா??!! சின்ன சின்ன பழக்கங்கள் பெரிய பலனை அளிக்கும் என்பதை நம்புவதில்லை யாரும். என்னையே எடுத்துக்கொள்ளுங்க... சில வருஷங்களுக்கு முன் மருத்துவரிடம் சென்றபோது "ஆரோக்கியமா இருக்க மருந்து கொடுங்க" என்று கேட்டேன்... டாக்டர் தாத்தா "சமச்சீரான உணவு முறையும் மிதமான உடற்பயிற்சியும்" என்று பிரிஸ்கிரிப்ஷன் பேடில் எழுதினார் .
என்னைப் பொறுத்தவரை அணுவளவேனும் முயற்சி செய்யணும். முயற்சிக்கு ஏற்ற கூலியை எதிர்பார்க்கும் மனநிலையை கொண்டு வந்தால் எல்லாம் அழகாக இருக்கும். என்ன தான் தொழில் நுட்ப முன்னேற்றம் நாம் நினைத்ததை அந்த எண்ணம் முடியும் முன் கிடைக்க செய்யுதாலும் , ஒரே ஒரு பழைய விசயம் மாறாது.
"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்"

